×

ரூ.381.76 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்ட மூணாறு மலைச்சாலை 12ம் தேதி திறப்பு: ஒன்றிய அமைச்சர், கேரள முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

மூணாறு: மூணாறு – போடிமெட்டு மலைச்சாலை மற்றும் செருதோணி பாலம் ஆகியவற்றை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வரும் 12ம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார். கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு – போடிமெட்டு இடையே 42 கிமீ தூர மலைச்சாலை, இருவழிச் சாலையாக ரூ.381.76 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்டது.

2017 செப்டம்பரில் துவங்கிய இந்தப் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்றன. அந்த வழியில் வாகனங்களும் சென்று வரும் நிலையில், ஒன்றிய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி இந்தச் சாலையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அமைச்சர் வர இயலாததால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 12ம் தேதி அமைச்சர் நிதின் கட்கரி அதிகாரப்பூர்வமாக இந்தச் சாலையை திறந்து வைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.25 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள செருதோணி பாலத்தையும் அமைச்சர் திறந்து வைக்கிறார். இதுதவிர அடிமாலி – குமுளி தேசிய நெடுஞ்சாலை (என்.எச். 185) அகலப்படுத்தும் பணிகளையும் அமைச்சர் துவக்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், கேரள சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ், கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் ஆகியோர் பங்கேற்பார்கள் என இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியகோஸ் தெரிவித்துள்ளார்.

The post ரூ.381.76 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்ட மூணாறு மலைச்சாலை 12ம் தேதி திறப்பு: ஒன்றிய அமைச்சர், கேரள முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Munara Mountain Hall ,Union Minister ,Chief Minister of Kerala ,Munara ,Nitin Kadkari ,Munara-Podimettu Mountain ,Seruthoni Bridge ,Kerala CM ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...